Sunday 31 December 2017

டிசம்பர் 31 ஒரு பயணம்

பொதுவா வாராவாரம் ஒரு படத்தை பார்த்துட்டு விமர்சனம் எழுதிடுவேன், ஆனால் இந்த வாரம் பல படங்கள் வந்தாலும் ,  சில பல வேலைகளால் எந்த படமும் பார்க்க முடியல , சரி எதையாவுது எழுதுவோம்ன்னு இந்த சமூக கிறுக்கனுக்கு வந்து எழுதலாம்ன்னு தோணுச்சி.

வருஷா வருஷம் ஒரு புது வருஷம் வருது , எல்லோரும் சொல்லுவது போல இந்த வருஷமும் காலண்டர் தேதி தவிர நாம ஒன்னும் உருப்படியா கிழிக்கல, ஆனா இந்த டிசம்பர் 31ம் தேதி  நடக்கும் விஷயங்கள் ஒரு பயணமாக எழுதலாம்ன்னு ஒரு ஐடியா(மூக்கு புடைப்பா இருந்தா யோசிக்க தோணும்) .

நாம வீட்டுல இருந்தா டிவி தவிர ஒன்னும் பார்க்க மாட்டோம் , சரி டிவி போட்டா , இந்திய இந்த வருஷம் , உலகம் இந்த வருஷம் , இந்த வருஷம் சிறந்த படங்கள் , புது வருஷம் ராசிபலன்கள்ன்னு, தனியார் சேனல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்னைக்கு வரைக்கும் எத்தனை சேனல் வந்தாலும் மாறாத இந்த நிகழ்ச்சிகள் , மக்கள் பார்க்குறாங்களா இல்லையான்னு  கவலைப்படாமல் போட்டுக்கிட்டு இருக்காங்க.

அட இந்த டிவி தொல்லை தாங்கல ஆப் பண்ணிட்டு , நாம வழக்கம் போல நம்ம கையில இருக்குற மொபைல் நோண்டுவோம் பார்த்தா, ஜியோகாரன் தினமும் 1gb  free data கொடுத்தாலும், நம்ம பசங்க 4gbக்கு ஒரே forward wishesகளும்  , imagesகளையும்  இருக்குற எல்லா குரூப்களிலும்  அனுப்பி நம்மை torture பண்ணுவாங்க, இது எதுவும் சம்மந்தம் இல்லாம இந்த மொபைல் providersகாரங்க  இன்னைக்கு SMS அனுப்பினா  free கிடையாது  sms சார்ஜ் பண்ணுவோம்ன்னு ஒரு மெசேஜ் அனுப்புவாங்க, யாரும் இல்லாத கடைக்கு யாருக்கு டா  டீ ஆத்துறீங்கன்னு கேட்க தோணும்

 ச்சே இந்த பிரச்சன்னை எல்லாம் வேண்டாம் டா, வெளியே ஒரு நட நடந்து என்ன நடக்குதுன்னு  பார்க்கலாம்  பார்த்தா , அப்போ தான் ஒருத்தன் வந்து, அப்புறம் மச்சி நியூ இயர் பிளான் என்னன்னு கேட்பான், டிசம்பர் 29ம் தேதியிலிருந்து இந்த கேள்வி கேக்க ஆரம்பிச்சிடுவானுக, அதுவும் 31ம் தேதி சரக்கு அடிச்சி மட்டை ஆகுபவனலிருந்து, தயிர் சோறு சாப்பிட்டு மட்டை ஆகுபவன் வரை இந்த கேள்வி கேட்ப்பானுங்க , எதுக்கு யார்கிட்ட கேக்கணும் ஒரு விவஸ்தை இல்லாமல் பாரபட்சம் இல்லாமல் கேட்ப்பாங்க.

அப்படியே ரோட்ல போனா , புதுசு புதுசா one way , no way  இருக்கும் , மேலும் தீடிர்ன்னு முளைத்து இருக்கும் barricadeகளுடன்  எவன்  எந்த  வண்டில போதையில வந்து மோதி என்ன ஏழரைய கூட்டுவனோன்னு யோசினையில பாதுகாப்பில் இருக்கும் போலீஸ்காரர்கள்,முகம் தெரியாதவனுக்கு அவசரத்துக்கு உதவாதவன் கூட அன்னிக்கு இரவு முழுவதும் ,முகம் தெரியாதவனுக்கு ஹாப்பி நியூ இயர்ன்னு சொல்லிட்டு போவானுங்க.


இவனுக தொல்லை தாங்கல திரும்பவும் வீட்டுக்கு போகலாம் பார்த்தா, போற வழில நம்ம தெரு பசங்க ஸ்டார் கட்டிக்கிட்டு, பாட்டு போட்டுக்கிட்டு , கையில கேக் ரெடியா வச்சிக்கிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு , ஊ ஊ ன்னு ஊளை விட்டுகிட்டு ,ஏதோ 15ஆக்ஸ்ட்1947 ராத்திரி சுதந்திரத்துக்கு காத்துகிட்டு இருக்கிறா மாதிரி இருப்பாங்க.

இதை எல்லாம் தாண்டி நம்ம வீட்டு வாசலுக்கு போனா!, நம்ம வீட்டுல இருக்கும் பெண்கள் அஞ்சறை பெட்டியோடு வெளியே நிப்பாங்க, என்னடான்னு எதாவுது சமைக்க போறாங்களான்னு பார்த்தா, அது சமையல் அஞ்சறை பெட்டி இல்ல, கோலம் போடுறதுக்கு கலர் வச்சி இருக்கும் பெட்டி, இது பரவாயில்லை சில பேரு வீட்டுல கொட்டாங்குச்சில கொட்டி வச்சியிருப்பாங்க,மார்கழில கோலம் போடுவது நம்ம கலாச்சாரம் , ஆனா இந்த நியூ இயர்க்கு ஸ்பெஷல் ஆகா கலர் போட்டு கோலம் போடுவது என்பது சமீப வருஷங்களில் எழுதப்படாத புது கலாச்சாரம் என்று ஆகிடுச்சு .

ஒரு பக்கம் பசங்களோட ஆட்டம் பாட்டம் , மறுப்பக்கம் பெண்கள் தெருக்களில்  கோலப்போட்டி, இப்படின்னு உங்க கொண்டாட்டத்தின் நடுவே எங்க தூக்கத்தை ஏன்டா கலைச்சிங்கன்னு கேட்க்காமல் கேட்க்கும் நாய்களின் கூட்டம் மறுப்பக்கம்.

இப்படி இந்த பயணத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு போனா, 12மணிக்கு சன் மியூசிக் ல  சகலகலா வல்லவன் கமல் ஹாப்பி நியூ இயர் சொல்லுவதை கேட்டுட்டு , கண்ணை மூட்டிட்டு தூங்குவது தான் மிச்சம் .காலையில முழிச்சி வாசலை பார்த்தா Happy New Year ன்னு போட்டு ஒரு கோலம் இருக்கும்.

 சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு இல்லை என்று சொல்லும் கட்சிக்கு தெரியாத ? ,நம் வீட்டு வாசலில் கோலம் வடிவில் Happy New Year என்கிற ஆங்கிலம் நுழைந்துவிட்டது என்று .


குறிப்பு : இந்த பதிவு எந்த கலாச்சாரத்திற்கும் எதிரானது அல்ல , இவன் என்ன ஒழுங்கா, இவன் எந்த ஆட்டம் போடுவது இல்லையா என்று கேட்க்கும் உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு தெரியும் .

இப்படிக்கு 
சமூக கிறுக்கன் 

Tuesday 15 August 2017

Madras to Chennai - மதராஸ் முதல் சென்னை வரை

சினி கிறுக்கன் பேருல நம்ம பொதுவா சினிமா விமர்சனம் தானே பண்ணுவோம் ? ஆமா இந்த பதிவு எதுக்கு ? 

எனக்கு இன்னொரு பேரு இருக்கு. அது 
சமூக கிறுக்கன் ,

சினிமா பற்றி எழுதினா பல பேரு பாக்கிறாங்க ஆனா சமூகத்தை பற்றி எழுதினா எவனும் மதிக்கல , இருந்தாலும் இப்போ மதராஸ் தினம் வருது(22Aug) , நாம தான் சென்னைவாசி ஆச்சே , சென்னை பற்றி எழுதலன்னா  நல்லா இருக்காதே தோணுச்சு, அதான் இந்த பதிவு 

முதலில் மெட்ராஸ் தமிழ்நாடு ஆகியது , மெட்ராஸ் தமிழ்நாட்டின் தலைநகரம் ஆகியது , 1996ல் தலைநகரம் மெட்ராஸ் சென்னையாகியது 

சென்னைங்கிற கிராமத்தை ஒரு வெளிநாட்டுகாரர் வாங்கினாராம்  அந்த தினம் தான் மெட்ராஸ் தினம்ன்னு  சொல்லுறாங்க , அதாவது மெட்ராஸ் டேன்னு  கொண்டாடுறாங்கப்பா  , அட யாருப்பா இந்த மதராஸ் டே கொண்டாட ஐடியா கொடுத்தது ? நம்ம வின்ஸ்டன் டி சோசா , நம்மில் பல பேருக்கு  வின்ஸ்டன் சர்ச்சிலே தெரியாது இதுல வின்ஸ்டன் டி சோசாவா ? சரி அவரை பற்றி பேசுறது விடுங்க , மதராஸ் டே கொண்டாவதுக்கு முன்னாடி நம்ம சென்னை பற்றி பார்ப்போம் , ஏதோ என்னோட அனுபவத்தில்.

எந்த இலக்கியத்துக்கும் அப்பாற்பட்டது நம்ம சென்னை தமிழ் ,  பலர் கேவலமாக பார்க்கிறாங்க , ஆனால் அது ஒரு பாமரனின் அடையாளம் என்பதை மறந்து விடாதீங்க , ஹிந்தி தெரியலானாலும் , ஹிந்திகாரங்க கிட்ட ஹிந்தி இங்கிலிஷ் தமிழ் சேர்த்து சமாளிக்கற நம்ம ஆட்டோகாரங்க கெத்துதாங்க . அந்த சென்னை தமிழில், சென்னையில்  பிறந்தது தான்  கானா பாடல்.

என்னதான் சென்னை டிராபிக் திட்டின்னாலும், peak hour ல Omr ல் service ரோட்டுல பூந்து பூந்து வண்டி ஓட்டுவது ஒரு சந்தோசம் தாங்க, ஆண் பெண் பேதம் மறந்து , ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து , எல்லோரையும் சரிசமமாக  பார்த்தது நம்ம சென்னை ஷேர் ஆட்டோவும் , AC பஸ்ஸும் தாங்க

சென்னை டிராபிக் குறைக்க வந்த ஒரு புதுவரவு இந்த மெட்ரோ ரயில் , ஆனா அது நல்ல மாதவரவு உள்ளவனுக்கே ஒரு வரம், மற்றவனுக்கு அது வெறும் கான்க்ரீட்டால் கட்டிய மரம் .

என்னதான் சத்யம் தியேட்டர் போனாலும் , பல ஜோடிகளுக்கு புகலிடம் சங்கம் தியேட்டர் couple seat தாங்க , எவ்ளோதான் renovate பண்ணி புது படம் போட்டாலும் ஜோதி தியேட்டர்ன்னு  சொன்ன ஒரு நக்கல் சிரிப்பு எல்லோருக்கும் வர தான் செய்யும் ,அதே நேரத்தில் வெளியூரிலிருந்து flight ல வந்தாலும் சரி பஸ்ல வந்தாலும் சரி, எல்லோரோயும் முதலில் வரவேற்பது அந்த ஜோதி தியேட்டர் தாங்க .

நம்ம பாக்கெட் காலி ஆனாலும் செலவு இல்லாம போற இடம் நம்ம பீச் தாங்க ,ஆனால் இப்போ அந்த நிம்மதியையும் இந்த அரசாங்கம் காலி பண்ணிடுச்சி 

என்னதான்  இப்போ ஆன்லைனில் வாங்கினாலும் திநகர் platform கடையில் பேரம் பேசி வாங்கறது ஒரு சுகம் தாங்க , KFC ,MCD ல சாப்பிட்டாலும் திநகர் purchase முடிச்சி, ரங்கநாதன் தெரு முனையில் கரும்பு ஜூஸ்ம் , கோன் ஐஸ்கிரீம் சாப்பிடறது தாங்க நம்ம சென்னை மக்கள் .

நெல்லை அல்வா , மணப்பாறை முறுக்கு , கோவில்பட்டி கடலைமிட்டாய் , ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவான்னு எல்லோருக்கும் தெரியும்  , சென்னைன்னா வடகறின்னு எத்தன்னை  பேருக்கு தெரியும் ? சென்னைக்காரங்க கண்டுபிடுப்பு இந்த வடகறிங்க ,பெரியவங்க சும்மாவா சொன்னாங்க,  
" ஜவாலக்கடி கிரி கிரி சைதாப்பேட்டை வடக்கறின்னு " அதுமட்டுமா அத்தோ , பைஜோன்னு பர்மா ஐட்டம் கிடைக்கிறது நம்ம சென்னை தாங்க . தெருக்கு தெரு விற்கும் கையேந்தி பவன் இட்லியும் சரி , ராத்திரியில் விற்கும் பிரியாணியும் சரி,  பல வெளியூர்கார பிரம்மச்சாரிகளுக்கு வரப்பிரசாதம்ங்க 

நேற்று பெய்ஞ்ச மழையில் முளைத்த காளானை நிறைய லேடிஸ் ஹாஸ்டல் , பணம் கட்டி பாதுகாப்பாக இருந்தாலும் , அங்கே  தரும் சாப்பாடு வயித்துக்கு பாதுக்காப்பாக இருக்காது.


சென்னையில் என்னைக்கும் மாறாத ஒரு விஷயம்ன்னா  அது  தண்ணி பிரச்சன்னை , மழை பெய்ஞ்சி அதிகமா வந்தாலும் பிரச்சன்னை , இப்போ மழை பெய்யாம குடம் குடமா , தெரு தெருவா சுத்துறதும் ஒரு பிரச்சன்னை தான் ,  காலை 12 மணிக்கு முன்னாடியும் , ராத்திரி 10 மணிக்கும் அப்புறம் பல குடிமகன்களுக்கு தண்ணி ஒரு பிரச்சன்னை தான் .

சென்னையில் என்றைக்கோ மாறியது , இன்றும் மாறாதது கூவம்தாங்க , அழகான நதி , அழகான கிராமம் கூவத்தில் இருந்து ஊற்று எடுத்து வந்த அழகான சொல் இன்று இழிவான சொல்லாக மாறியது , தமிழ் நாட்டில் பல ஆட்சிகள் மாறினாலும் , மாறாத நாம் செய்த ஒரு பாவ செயல் இந்த கூவம்.

என்னதான் சென்னை கூட்ட நெரிசல் , டிராபிக் சொன்னாலும் , விசேஷ நாட்களில் அவங்க அவங்க சொந்த ஊருக்கு போன பிறகு, கூட்டம் இல்லாத திநகர் , புரசைவாக்கமும் , டிராபிக் இல்லா அண்ணா சாலை ,OMR  பார்க்க கஷ்டமா தான் இருக்கு , வந்தாரை வாழவைக்கும் சென்னை ,அதனால  இங்கே வெளியூரிலிந்து வந்தோர் அனைவரும் , சென்னையை திட்டினோம்ன்னு இல்லாமல் , உங்க புகுந்த வீடா நினைத்து வாழுங்க.

மயிலாப்பூர் காபி தூள் வாசனை 
சௌகார்பேட்டையின் ஸ்வீட் வாசனை, 
காசிமேடு மீன் வாசனை , 
மூலகோத்திரம்  கருவாட்டு வாசனை  , 
எந்த வாசனையாக இருந்தாலும் சரி , பல வாசனைகள் கலந்தது தான் இந்த சென்னைவாசிகள் .

குறிப்பு : சென்னை கடலும் கடல் சார்ந்த இடம் அதனால இலக்கியத்தில நெய்தல்ன்னு  சொல்லுவாங்க, 

மேலும் ஒரு குறிப்பு இந்த பதிவு என்னோட  அனுபவத்திலும் , சில கேள்விப்பட்ட விஷயங்களிருந்தும் எழுதியவை , ஏதாவது தப்பா இருந்த சொல்லுங்க மாத்திடலாம் .

இப்படிக்கு 
சமூக கிறுக்கன் .

Wednesday 15 June 2016

பெற்றோரே பெற்றோரே கட்டுமர பெற்றோரே

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நமக்கு நல்ல தெரிஞ்ச விஷயம் , இது மக்களுக்கு மட்டும் இல்ல இந்த அரசாங்கத்துக்கும் தான்.

2004 கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு அப்புறம் தான் ,அரசாங்கத்துக்கும், பெற்றோருக்கும் சூடு வைத்தது  போல் இருந்தது , அந்த மாதிரி பள்ளிகளுக்கு நடவடிக்கை எடுத்து வந்தது அரசாங்கம்.

2012ல் தாம்பரத்தில்  ஜியோன் பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையால் கீழே விழுந்து , விபத்துல ஒரு 6 வயசு சின்ன பொண்ணு இறந்து போச்சி , அதை மையமாக கொண்டு strawberryன்னு ஒரு படம் கூட வந்தாச்சி , அந்த சம்பவம் நடந்த பிறகு தான், வருஷா வருஷம் பள்ளி வாகனத்தை  RTO சோதனை பண்ண ஆரம்பிச்சாங்க ,பள்ளி  வாகனத்துக்கு மஞ்சள் நிறம் அடிக்கணும் , வேகத்தடை கருவி பொருத்தனம் ,தீயணைப்பு சாதனங்கள்  இருக்கணும் ,மேலும் சில சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்துச்சி , இது பள்ளி வாகனகளுக்கு மட்டும் இல்ல , கல்லுரி வாகனளுக்கும் பொருந்தும் ,ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் உள்ளது ? ஆம் உள்ளது ...
 பள்ளி திறக்கும் ஒரு சில நாட்களுக்கு முன்பு செய்திகளில் ,RTO பள்ளி வாகனங்களை  சோதனை செய்தது , தகுதியற்ற பள்ளி வாகனளுக்கு அங்கீகாரம் ரத்துன்னு செய்திகளில் சொல்லுவாங்க.
ஆனால் அந்த மாதிரி மஞ்சள் நிறம் கொண்ட பள்ளி வாகனங்கள் , எந்த அளவுக்கு சாலையில்  பார்க்கிறோம்? எத்தனை  பள்ளிகள் அரசாங்கம் சொன்னா மாதிரி வாகனங்கள் வச்சி இருக்குன்னு  தெரியுமா?உண்மை நிலவரம் என்ன தெரியுமா ?

ஆம் தெரியும் , அந்த பள்ளிகளுக்கு தெரியும், அந்த வாகனகளை இயக்குகிற travelsநிர்வாகத்துக்கு தெரியும் , ஏன் அதில் பிள்ளைகளை அனுப்பும் மரமண்டை பெற்றோர்க்கு தெரியும் , இதோ அந்த பள்ளி வாகனம் ,




 இவை தான் இன்றைய உண்மையின் முகம் , இதோ இந்த மாதிரி பள்ளி வாகனத்தில் தான் இன்றைய பெற்றோர் அனுப்புகிறார்கள்,

இந்த மகேந்திரா வேன்களிலும் ஆம்னி கார்களிலும்  செல்லும் பசங்களுக்கு எந்த அளவுக்கு பாதுக்காப்பு இருக்கிறது என்பதை இந்த பெற்றோர்கள் யோசிச்சி இருக்காங்களா ? அல்லது இந்த அரசாங்கத்திற்கு  எந்த அளவுக்கு தெரியும் ? ஏன் இந்த வாகனங்கள் சாலையில் செல்லும் போது இதை போக்குவரத்து காவல் கண்களில் படுவதில்லையா?  அல்லது RTO காதுகளில் கேட்பதில்லையா ? ஏன் இந்த வேன்கள் சைலென்ட் modeல்   செல்லுகிறதா ? அல்லது invisible modeல் செல்லுகிறதா ? நேரத்திற்கு பள்ளிக்கு போக வேண்டும்ன்னு  இந்த வகை வாகனங்கள் காலையில் சைரைய்ன் வைக்காத ஆம்புலன்ஸ்களாக தெருக்களில் பறக்கிறது , இதன் வேகத்தையும் பாதுகாப்பையும் அறிவது யாரோ ? மேலும் இந்த வாகனங்களில் டிரைவர் இருக்கையின் அருகேயே மூன்று அல்லது நான்கு மாணவர்கள் உட்கார்ந்து செல்லுகிறார்கள் அவர்களின் பாதுகாப்பினை அறிவது யாரோ ?

இந்த வாகனங்களை பற்றி கேட்டால் , பள்ளிக்கும் அந்த travelsக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுவாங்க ஆனால் , அந்த பள்ளிகளுக்கு முன்னாடி வரிசயாய் நிற்கும், இதை சென்னையில் பல பிரபல பள்ளிகளின் வளாகத்தின் அருகே பார்க்கலாம், மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாலும் , நேரம் மாற்றம் செய்தாலும் இந்த வேன் டிரைவர்களுக்கு தெரியும் ஆனா கேட்டால் அந்த பள்ளிகளுக்கும் அந்த வேன்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுவாங்க.

பல பிரபல பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்களே கிடையாது, அரசாங்கம் கூறுவது   போல் சில பள்ளிகளில் அந்த மஞ்சள் நிற  வாகனங்கள் இருந்தாலும் அவைகள் பெற்றோர்களுக்கு கட்டுபடி ஆகாத கட்டணத்தில் உள்ளதால் பெற்றோர்கள்  தம் பிள்ளைகளின் பாதுகாபின்னை மறந்து இத்தகைய தனியார் வாகனங்களை நாடி செல்லுகிறார்கள், எனவே அரசாங்கம்  மாணவர்களின்  பாதுகாப்பிற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் கீழே உள்ள வரிகள் தான் பெற்றோர்களுக்கு பொருந்தும்

பெற்றோரே பெற்றோரே  உங்களை  கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக மிதக்க மாட்டீங்க ,மரமண்டையாய் தான் இருப்பீங்க ..மீண்டும் ஒரு முறை ஜியோன் பள்ளி சம்பவம் போல் நடக்கும் வரை.

இப்படிக்கு 
சமூக கிறுக்கன் 

#samoogakirukkan 


Wednesday 3 February 2016

Thuu... - த்தூ ..

தமிழ் நாட்டுல சமிபகாலத்தில ரெண்டு வார்த்தை பிரபலம் ஒன்று பீப் , இன்னொன்று த்தூ ..
இந்த த்தூ இப்போ கேப்டன் சொன்னதால  பிரபலம் இல்ல , பல காலமா நம்ம நாட்டுல இருப்பது தான்,வேற எதுவும் இல்லைங்க நாம் அன்றாடும் பொது இடத்தில துப்புவது தான்.

ஆமாங்க நம்ம ஊரில் நிறைய துப்புஅறியும் சாம்பு இருக்காங்க .அதாவுது கற்பனை கதாபாத்திரம் detective சாம்பு இல்லைங்க , இவங்க வாயில் கண்டதையும் போட்டு கொதப்பி  எங்க துப்புவதுன்னு தெரியாம சாலையில் துப்பும் துப்புகெட்ட பசங்க இவனுங்க.

அட அரசாங்கம் குட்கா, மாவா, பான்பராக்  மாதிரி பொருட்களை 2013ல் இருந்து தடை செய்யப்பட்டு இருந்தாலும் இன்னும் நிறைய பேர் அதை பயன்படுத்துபவர்கள் இருக்காங்க, அந்த நாசமா போகிற பொருட்டுகளை  அவனுங்க எப்படியாவாது சாப்பிட்டு, உடலை கெடுத்துகிட்டு  போகட்டும் அது அவன் அவன் இஷ்டம், ஏன்னா அது அவன் அவன் தனிப்பட்ட உரிமை, சொன்னாலும் எவனும் கேட்க்கமாட்டங்க ,ஏன்னா புகையிலை உடல்நலத்திற்கு கேடுன்னு அட்டையில் போடுவது அதை தயாரிக்கிற கம்பெனியோட கடமை , அதுல எது போட்டு இருந்தாலும் சரி அதை வாங்கி வாயில் போடுவது நம்ம பசங்களின் உரிமைன்னு  இருக்காங்க .
அப்படி அதை பயன்படுத்தும்  உங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன் வாயில் போடுற வரைக்கும் தான் அது உங்க தனிப்பட்ட உரிமை ஆனா அதை ரோட்டுல துப்புவது உங்க உரிமை இல்ல.

துப்பு....
உங்க வீட்டுல துப்பு , ..
நீ ஆட்டோ ஓட்டும் போது உன்னோட ஆட்டோகுள்ள துப்பு ,..
கார் ஓட்டினா உன்னோட கார்ல துப்பிக்கோ ,
என்ன ​​​​​​​ ___________  ரோட்டுல துப்புர? அதுவும் வண்டி ஓட்டும் போதே எதுக்குடா துப்பூரிங்க, சமிபகாலமா இது ரொம்ப அதிகமா இருக்கு,  2 வீலர் ஓட்டுறவங்க அவனுக்கு பின்னாடி உட்க்கார்ந்து இருப்பவங்க, helmet போட்டவங்க கூட அதை துக்கிட்டு வண்டி ஓட்டும் போதே நடுரோட்டிலே துப்புராங்க, பின்னாடி எவன் வரான் எப்படி வரான் பார்கிறதே கிடையாது...

முன்னாடியெல்லாம் நடந்து போய்கிட்டு இருக்கும் போது, எப்போ எவன் வண்டியை நடுப்புல விடுவான் பார்த்து போகவேண்டியது இருக்கும் ஆனா இப்போ எவன் எப்போ எப்படி நடுப்புல திடீர்ன்னு துப்புவான் தெரியல,அதை வேற பார்த்து போக வேண்டிருக்கு,துப்பரது துப்புரிங்க கொஞ்சம் ஓரமா துப்பலாம்ல.ஏன்டா பொது இடத்தில துப்புறது தப்பு அதுல என்னடா வியாக்கியானம்?நியாயம் எல்லாம் சொல்லுறேன்னு  கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது, அதாவது நம்மக்கு முன்னாடி போகிறவன் துப்புறது நம்ம மேல படவில்லை என்றாலும், அந்த ஒரு அடி ரெண்டு அடி கேப்ல அவன் பின்னாடி வரும் போது,அப்படா  நல்லவேளை நம்ம மேல படலை என்றும், ச்சீங்கிற ஒரு அறுவிறுப்பும் தோனுதுல, அதுக்கு தான் அப்படி சொன்னேன்.

இதுல ரொம்ப கொடுமையான விஷயம் என்னன்னா, இந்த பான்பராக் போட்டு துப்புபவனை விட வெறும் எச்சியை துபுரவங்க நிறைய பேரு இருக்காங்க,ஏன் சும்மான்னா  வெறும் எச்சியை ரோட்ல துப்புராங்கன்னு தெரியல, இவனுங்க வீட்டுக்குள்ளையும்  இப்படி தான் சும்மான்னா துப்பிப்பானுகளா தெரியல, அவங்களுக்கு எதாவது சைக்கலாஜிக்கல் பிரச்சனை இருக்கான்னு தெரியல,ஏன் இப்படி சொல்லுறேனா கடந்த டிசம்பர்-2015 மழைல மெயின் ரோட்ல வெள்ளமா தண்ணி ஓடுது அதுல நடந்து போகும் போது துப்புரானுங்க இவனுங்க !!,  ஏன்டா நீ துப்புரியே அந்த துப்புர  எச்சி அளவுக்காவுது உன்னோட தலையில அறிவு இருக்கா? உனக்கு பின்னாடி நிறைய பேரு நடந்து வந்துகிட்டு இருக்காங்களே ,அப்படி மழை தண்ணில துப்பினா பல வியாதி வருமே, அப்படின்னு எதுவுமே தோணலையா?

கண்ட இடத்தில துப்பிவிட்டு  பின்னாடி  வெறும் காலில் மாலை போட்டு வரும் சாமியார்க்கு, பூசாரிகளுக்கும்  பாதபூஜை செய்வது ஏன்? இதற்க்கு பெயர் தான் செய்த பாவத்தை கழுவதா ?

மச்சி எங்கயோ எவனோ இவன் மேல துப்பி இருப்பான் போல என்னமா கூவுரான் பார்ன்னு சொல்லுகிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது, இல்லைங்க யாரும் என்மேல துப்புல,சமிபகாலமா இந்த மாதிரி துப்புறது ரோட்ல நிறைய நடக்குது அது பார்க்கும் போது நம்மக்கு  கடுப்பா இருக்கு, இதை நம்ம எல்லோரும் தினசரி பார்க்கிறது தான், ஏன் அதை இங்கு பதிவு செய்யகூடாதுன்னு தோணிச்சி முடிஞ்சா இதை ஷேர் பண்ணுங்க.இதை படிச்சிட்டு கொஞ்சம் துப்புரது குறைத்தால் சந்தோசம் தான்.ஏன்னா நம்ம மக்கள் அபராதம் எல்லாம் போட்டா  கூட கேட்க மாட்டாங்க, அவங்களா தோனுச்சினா தான் மாறுவாங்க, அப்படி இந்த பதிவு மாற்றம் கொண்டு வந்தா சந்தோஷம் தான்.

இப்படிக்கு
சமூககிறுக்கன்


Thursday 31 December 2015

Yenna Machi New Year Plannu- என்ன மச்சி நியூ இயர் பிளான்

வணக்கம், 2015ல்  சினி கிறுக்கனாக எழுதி வந்த நான், அப்போ அப்போ FBல் சமூக கிறுக்கனாக மாறி சில பதிவுகள் எழுதினேன், 2016ல் ஒரு புதிய பரிமானம் இந்த சமூக கிறுக்கன் , நான் பார்க்கிற சில விஷயங்கள் ஏன் எதற்குன்னு தெரியமா செய்கிற சில விஷயங்கள், மற்றும் என்னோட கற்பனைகளின் பதிவுகள் தான் இந்த சமூக கிறுக்கன் ப்ளாக்.

சரி வாங்க இந்த சமூக கிறுக்கனின் முதல் பதிவு என்ன என்று பார்க்கலாம், whats appல் 2015 ஒரு பார்வை வந்துச்சு, அதாவுது most used words , most trolled இன் FB, question of the year " Why Kattappa Killed Bhaubali ", most irritating question of the  year அப்படி இப்படின்னு நிறைய வந்துச்சு அனால் எனக்கு எப்பொழுதும் most irritating question of  every year is "என்ன மச்சி நியூ இயர் பிளான் "

வருஷா வருஷம் 25டிசம்பர்க்கு அப்புறம் எல்லோரோடைய வாயில் வரும் ஒரு விஷயம் என்ன மச்சி நியூ இயர் ப்ளான்? இதை ஆண்கள் பெண்கள் எல்லோரும் பயன்படுத்துகிற ஒரு வார்த்தை நியூ இயர் பிளான் என்ன? டேய் அப்படி என்ன தான் டா பிளான் பண்ணுவாங்க? சரி வாங்க பார்க்கலாம்

பெருசா ஒன்னும் பண்ண மாட்டங்க 2 wheeler எடுத்துகிட்டு மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் போயிட்டு.. 12 மணி ஆனதும் ஓ ஊ ஓ ஊ ஓ ஊ  ன்னு ஊளையிட்டு கத்தி கிட்டு தெரிஞ்சவ தெரியாதவ குறிப்பா பெண்கள் கிட்ட எல்லாம் ஹாப்பி நியூ இயர்ன்னு சொல்லிக்கிட்டு, தறிகெட்ட தனமா போதையில அல்லது போதை இல்லாமல் அதே போல் நிதானம் இல்லாமல் என்னமோ இந்த உலகமே பிறந்தது இவனுக்காக தான் போல வண்டிய பீச் ரோடு முழுசா ஓட்டுவது, பெசன்ட் நகர் , ECR வரைக்கும் ஏன் எதற்கு எங்க போறோம்ன்னு தெரியாம போயிட்டு, முடிஞ்ச அன்னிக்கு போலீஸ்காரங்களை எல்லாம் கலாயிச்சிட்டு, அன்றைக்கு தான் தன்னோட தனி மனித சுதந்திரம் பயன்படுத்துவாங்க இந்த மக்கள். இது இல்லன காசு இருக்கவன் பெரிய பெரிய ஹோட்டல், resortல் போயிட்டு தண்ணி அடிச்சிட்டு ஆடி பாடிகிட்டு இருப்பாங்க இவளோ தான் இவங்க ப்ளான் கேட்டா சந்தோஷத்தை வெளிபடுதுற வருஷத்தில ஒரு நாள்ன்னு ஒரு வியாக்கியானம் பேசுவாங்க.

வருஷா வருஷம் புத்தாண்டு அன்றைக்கு சாலை விபத்துகள் அதிகம் ஆகிட்டு இருக்குனு சொல்லுறாங்க மேலும் கடல்ல குளிக்க தடை சொன்னாலும் அன்றைக்கு மட்டும் கடலில் மூழ்கி இறக்கிறவங்க எண்ணிக்கை வருஷா வருஷம் இருக்கு( இது விகடனில் படித்த ஒரு விஷயம்)

அப்புறம் சமிபகாலமா social networkல்  ஒரு trend இருக்கு, அது என்னன்னா ? தீபாவளி வந்தா போதும் உடனே ஒரு status போடுவாங்க, அதாவுது பாட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடனும் ஏன்னா  noise pollution, environment pollution, road எல்லாம் குப்பை ஆகுது, வீட்டுல நாய்க்கு கஷ்டம் பூனைக்கு கஷ்டம், வெடி இல்லா தீபாவளி கொண்டாடுங்கள் சொல்லுவாங்க,ஏன்டா அந்த பட்டாசு வாங்குறதுல நம்ம சிவகாசில  பாட்டாசு செய்கிற ஒரு குடும்பத்துக்கு ஒரு சின்ன அளவு வருமானம் போகும்ன்னு ஏன்டா உங்களுக்கு தோனல?ஆனா நியூ இயர்ல வாங்குற ஒரு குடி யாருக்குடா வருமானம் போகுது?

பாரம்பரியமா நடந்து வந்த ஜல்லிக்கட்டில் மாடுகளை கொடுமை படுத்துறாங்க, அந்த விளையாட்டு நடக்கும் போது மனித உயிர்கள் போகுது பல விபத்துகள் நடக்குது அதனால அதை தடை செய்பவர்கள் கவனத்திற்கு இந்த new year celebrationல் விபத்து நடக்குது, உயிர் பலி நடக்குது அதுக்காக இதை தடை செய்வார்களா? செய்யமாட்டாங்க ஏன்னா இதுக்கு பின்னாடி
நடக்கிற வியாபாரம் அதன் மூலம் வரும் வருமானம், ஹோட்டல் , resort எல்லோருக்கும் வருமானம், அரசாங்கம் உட்பட , நான் சொல்லுவது வரி மூலமாக வரும் வருமானம் தான். வேற எதுவும் சொல்லவில்லை.

இப்படிக்கு
சமூக கிறுக்கன்